கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யூஎம்டி ராஜா( வயது 55). காந்திபுரத்தில் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். இவர் இந்தியாவின் 79″ ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஒரு மரத்தின் ஆணிவேரை எடுத்து அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், காமராஜர், பகத்சிங் சுப்பிரமணிய பாரதியார், ரவீந்திரநாத் தாகூர், ஜவகர்லால் நேரு, வ.உ.சி, ராஜாராம் மோகன் ராய், அப்துல் கலாம் ஆசாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத், மொரார்ஜி தேசாய் தமிழ்நாடு, மகாகவி பாரதியார், டாக்டர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களை பெயின்டால் ஆணிவேர்களில் வரைந்து உள்ளார்.
1/12அடி உயரம் உள்ள முக்கிய ஆணிவேரில் 8 கிளை வேர்கள் உள்ளன. ஒவ்வொரு தலைவர்களின் படங்களையும் ஒன்றரை இன்ச் அளவில் பெயிண்ட் மூலம் தத்ரூபமாக வரைந்து உள்ளார். இதை வரைவதற்கு 3 நாட்கள் ஆனதாக ராஜா கூறுகிறார்.
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் அனைவரும் நமது சுதந்திரத்தின் ஆணிவேர்கள் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஆணிவேர்களில் 20 தலைவர்களின் உருவப் படங்களை வரைந்ததாக ராஜா கூறினார். இதை வருகிற 15″ஆம் தேதி கோவை வ உ சி மைதானத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர் பவன் குமாருக்கு பரிசாக அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
நகை தொழில் செய்து வரும் ராஜா ஏற்கனவே, திராட்சை பழங்கள், சீதா பழம், ஆகியவற்றிலும் படங்களை வரைந்து ஆச்சரியப்பட வைத்தவர். 2021 ஆம் ஆண்டு கண்ணுக்குள் தேசியக்கொடி வரைந்து ஆச்சரியப்பட வைத்தவர். இப்போது ஆணிவேரில் ஆச்சரியப்பட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.