கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மணிகண்டன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுத் தனது வேலைக்குச் சென்றுள்ளார். தனலட்சுமி கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
வேலைக்குச் சென்ற மணிகண்டன், மதிய நேரத்தில் தனது மனைவி தனலட்சுமியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தனலட்சுமி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். இது குறித்து தனலட்சுமியின் தாயார் நாகரத்தினம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

