கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள மேல் வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் கவுரி (17). இவர், சேலம் மாவட்டம் ஆத்தூரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுரி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கவுரி அணிந்திருந்த தங்க மோதிரத்தை காணவில்லை. இதையறிந்த அவரது தாய் செல்வி மோதிரம் எங்கே? என கேட்டு கவுரியை திட்டி விட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வெள்ளிமலைக்கு சென்றார். இதில் மனமுடைந்த கவுரி வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
கடைக்கு சென்று வீடு திரும்பிய செல்வி லேசான மயக்கத்தில் இருந்த கவுரியிடம் விசாரித்தபோது, அவர் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதைகேட்டு பதறிய செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கவுரியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கவுரி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வராயன்மலை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

