போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 8 வடிவத்தில் 16 மணி 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம்.
வைப்ரக்ஸ் சைக்கிளிங் அகாடமி மற்றும் கோவை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ரோட்ரேக்ட் கிளப் இணைந்து போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்விற்காக தொடர்ந்து ஒரே இடத்தில் 8 வடிவத்தில் 16 மணி நேரம் 40 நிமிடங்கள் அதாவது 1000 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூரியா. இவரது உலக சாதனை முயற்சியை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் நடுவலூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சூரியா. இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ள இவர் தற்போது வைப்ரக்ஸ் சைக்கிளிங் அகாடமி மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் ரோட்ரேக்ட் கிளப்புடன் இணைந்து போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்விற்காக தொடர்ந்து ஒரே இடத்தில் 8 வடிவத்தில் 16 மணி நேரம் 40 நிமிடங்கள் அதாவது 1000 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 6 மணியளவில் இந்த உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது. இதனை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் சிவக்குமார் மற்றும் டீன் சர்மிளா ஆகியோர் மாணவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து தொடங்கி வைத்தனர்.
காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் மாணவர் சூரியாவை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை யுனைடெட் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பள்ளி, கலைக்கல்லூரி, நர்சிங் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, பார்மஸி கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வந்திருந்து கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
காலை 6 மணிக்கு சைக்கிள் ஓட்டத் துவங்கிய மாணவர் இரவு 10 மணி 40 நிமிடம் வரை ஓட்டினார். இவர் ஏற்கனவே செய்திருந்த தனது 11 மணி நேரம் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டிய சாதனையை முறியடித்து தற்போது 16 மணி நேரம் 40 நிமிடங்கள் அதாவது 1000 நிமிடங்கள் 8 வடிவில் ஒரே இடத்தில் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.
இவரது உலக சாதனை முயற்சியை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து சாதனை முயற்சியினை பார்வையிட்ட புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் கலைவானி, கோவை மாவட்ட முதன்மை

ஒருங்கிணைப்பாளர் கீதா தயாளன் ஆகீயோர் சூரியாவின் சாதனையை அங்கீகரித்து மெடல் மற்றும் ஐகான் ரெக்கார்டு ஹோல்டர் என்ற விருதும், வேலூர் முத்தமிழ் சங்கம் சார்பில் சாதனைச் செம்மல் விருதும் வழங்கி கவுரவித்தனர். மேலும் இவரது உலக சாதனைக்கான சான்றிதழ் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இவர் ஏற்கனவே 3 மணி நேரம் வெவ்வேறு கோணத்தில் சிலம்பம் சுற்றியும், ஒரு மணி நேரம் வேகமாக சிலம்பம் சுற்றியும், 1008 ஆணிப்படுக்கையில் படுத்துக்கொண்டு சிலம்பம் சுற்றியும், கட்டைக் காலில் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றியபடியே 16 கிலோ மீட்டர் நடந்து சென்றும்,

சாக்பீஸ் கொண்டு 9 தொடர் சங்கிலிகளை உருவாக்கியும் மற்றும் 11 மணி நேரம் நிற்காமல் சைக்கிள் ஓட்டியும் சாதனைகளை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் யுனைடெட் கல்வி நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம், துணைத் தலைவர் மைதிலி சண்முகம், ரோக்ட்ராக்ட் கிளப் பொருப்பாளர் கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குநர் பிரதீப் உள்பட யுனைடெட் கல்வி நிறுவன முதல்வர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

