இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் மதூர் சத்யா. இவர் ஊடக விவாதங்களில் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தனது இடதுசாரி கருத்துகளை பேசி பிரபலம் அடைந்தவர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அதில், ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மின்னஞ்சலுக்கு கடந்த 13ஆம் தேதி மதூர் சத்யா மீது பாலியல் புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில், கட்சியின் தென் சென்னை மாவட்ட குழு கடந்த 14ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்து, சில முடிவுகளை எடுத்தது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளான AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதூர் சத்யா வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 15ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மதூர் சத்யாவிடம் அமைப்பு ரீதியாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யாவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து, அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த மதூர் சத்யா மீது பாலியல் புகார் எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

