Skip to content

முதல் மனைவி இருக்கையில் 2-வது திருமணம்: பாஜக எம்எல்ஏ மீது புகார்

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் சதார் தொகுதி பாஜக எம்எல்ஏவும், பிரபல நடிகருமான ஹிரண் சட்டர்ஜி, சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிரண் சட்டர்ஜிக்கும், அனிந்திதா என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், வாரணாசியில் உள்ள நதிக்கரை படித்துறையில் ரித்திகா கிரி என்ற மாடல் அழகியை ஹிரண் சட்டர்ஜி நேற்று இந்து முறைப்படி ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முதல் மனைவி அனிந்திதா, “தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் ஹிரண் சட்டர்ஜி செய்து கொண்ட இந்த இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “நீண்ட காலமாக நான் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்தேன், மகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவே இதுவரை அமைதியாக இருந்தேன்” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக எம்எல்ஏவின் இந்த தனிப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ஹிரண் சட்டர்ஜியோ அல்லது மாநில பாஜக தலைமையோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

error: Content is protected !!