திருச்சி மாநகரம் முழுவதும் தினசரி சேகரிக்கப்படும் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தொடங்கியது.
8000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இந்த தனியார் தொழிற்சாலையில் இருந்து, திருச்சி மாநகராட்சிக்கு மாதம் 50ஆயிரம் ரூபாய் வாடகை வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கோழிக்கழிவுகளை மீன்களுக்கான உணவாக மாற்றும்போது, அரியமங்கலம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தினசரி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுகளை சேகரித்து, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்புவதற்கு மூன்று ராட்சத கிணறுகள் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்குள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையில், நாய்களுக்கான கருத்தடை மையம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் செயல்பட்டு வருகிறது.
குப்பைகளை தரம் பிரிப்பதற்கான நுண்ணுரம் செயலாக் மையம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் இயங்கிவருகிறது. விரைவில் மாடுகள் வதைக் கூடத்தையும் அரியமங்கலம் குப்பை கிடங்கிற்குள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கட்டக்கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டு வரும் அரியமங்கலம் குப்பை கிடங்கை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் கோழி கழிவுகளில் இருந்து, மீன்களுக்கான உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டதை தொடர்ந்து தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
