10 அமைச்சர்கள் முன்னிலையில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை கூட்டம். 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக முத்தரப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், கோவி.செழியன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொண்டனர். தமிழ அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கடந்த செப்.1 ம் தேதி முதல் 1,943 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நடப்பாண்டில் டிச.26-ம் தேதி வரை 14.83 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் 5.31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை விட நடப்பாண்டில் 9.53 லட்சம் டன் கூடுலதாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.எதிர்வரும் சம்பா கொள்முதலுக்காக 4,706 கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 8,056 பணியாளர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 3,914 நெல் தூற்றும் இயந்திரங்களும், 54,715 தார்பாய்கள், 4.52 கோடி சாக்குகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், கொள்முதல் நிலையங்களை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி நடைமுறை மாற்றங்களால் 10 டன் அளவில் இருந்து 21 டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் செறிவூட்டப்பட்ட அரிசிகள் 25 கிலோவில் இருந்து 50 கிலோவாக மாற்றப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் அரவை அரிசியோடு கலக்கப்படுகிறது.தற்போது மாலை 6 மணி வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இரவு 8 மணி வரை நெல் கொள்முதல் செய்யவும், நாளொன்றுக்கு 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், அதற்கு தேவையான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிபடி நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு சம்பா கொள்முதலில் எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் அதற்கான அனைத்து பணிகளையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.

