கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் மதுபானக்கூடம் கேட்டின் முன்பு சுரேஷ் என்பவரை தமிழ்ச்செல்வன் என்பவர் குடிபோதையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது.
இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்துவரும் 50 வயதான சுரேஷ் என்பவர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த திருமலை நாயக்கன் பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போதையில் இருந்த சுரேஷ் மதுபான கூடத்திலேயே படுத்துவிட்டார். இரவு 11 மணியளவில் மதுபான கூட ஊழியர்கள் கூடத்தை மூடுவதற்காக உள்ளே இருந்த சுரேஷை தூக்கிக் கொண்டு வந்து கூடத்தின் முன் இருந்த கேட் முன்பாக வெளியில் படுக்க வைத்துள்ளனர்.
இந்தநிலையில் மதுபான கூடத்தில் ஏற்கனவே வாக்குவாதம் செய்த தமிழ்ச்செல்வன் இரவு 11.45 மணிக்கு அங்கு வந்து தான் வைத்திருந்த அரிவாளால் சுரேஷின் வலது பக்க கழுத்து மற்றும் முகம், தாடை ஆகிய இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடுதுடித்து இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயகக்ன்பாளையம் போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்த தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கூட வாசலில் மதுபோதையில் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

