தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (45 ) .இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, என்ற இரண்டு மகள்களும் நீலகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
பாலமுருகன் ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவராக ஒரு முறையும்,
தலைவராக மூன்று முறையும் இருந்துள்ளார். அதிமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.
இன்று அதிகாலை நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள டிரான்ஸ்பாரத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அடுத்த நிமிடம் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் பாலமுருகன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர். வெடி சத்தத்தில் பாலமுருகன் காது கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் பாலமுருகன் புகார் செய்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்று பல்வேறு கோணங்களில் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.