உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு மகனும் இருந்தனர்.
இன்று காலை மணீஷ் குமாரின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது படுக்கையறையில் மணீஷ், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என அனைவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தகவலறிந்து வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மணீஷும் அவரது மனைவியும் சேர்ந்து தங்களது 3 குழந்தைகளையும் முதலில் கொலை செய்துவிட்டு, பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து மணீஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடன் தொல்லையா அல்லது குடும்பப் பிரச்சினையா எனத் தற்கொலைக்கான துல்லியமான காரணம் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

