இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 வது மாநாடு வரும் ஆகஸ்ட் 15 முதல் 18 ம் தேதி வரை சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சரும் தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9 ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அந்த போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவளித்து போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தை மீட்போம் என்கிற முழக்கம் 2021 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த முழக்கம். அதற்கு காரணம் பா.ஜ.க விற்கு தமிழகத்தை அதிமுக அடகு வைத்திருந்தார்கள். அவர்களிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என நாங்கள் முழக்கத்தை முன்வைத்தோம்.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி யாரிடமிருந்து தமிழகத்தை மீட்க போகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜக என்கிற எலிப் பொறியில் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் உள்ளார்.
பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை அதிமுக தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை.
தொண்டர்களிடமிருந்தும் பாஜக விடமிருந்தும் தன்னை காத்து கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார்.
அதிமுக வை கபளிகரம் செய்து தங்களை பலப்படுத்தி கொள்ள பா.ஜ.க முயற்சி செய்கிறார்கள்.
அன்வர் ராஜா மட்டுமல்ல அதிமுக வில் இருக்கும் பல தலைவர்கள் பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜெயலலிதா பா.ஜ.க உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க உடன் கூட்டணி என தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். பா.ஜ.க உடன் கூட்டணி கூடாது என அதிமுக வில் உள்ள சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் கூறி வருகிறார்கள். அதிமுக வை உடைக்க பாஜக முயற்சி செய்கிறார்கள்.
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது.
234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து பேச்சுவார்த்தையின் போது முடிவெடுப்போம்.
அதிமுகவை யாராலும் கபளீ கரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் அப்படி என்றால் அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பது யார் என்பதை எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக கூற வேண்டும்.
பா.ஜ.க வால் அதிமுக காலியாக போகிறது அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் கவலைப்பட வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.