உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டம் ஜிஜோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஊர்மிளா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு மயங்க் (12) என்ற மகன் இருந்தான். ராஜேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தருமாறு கூறி அடிக்கடி ஊர்மிளாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று மீண்டும் மது போதையில் வந்த ராஜேஷ், இது தொடர்பாக மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவரைக் கண்டித்த ஊர்மிளா, வழக்கம் போலப் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார். மனைவி சென்ற பிறகும் ஆத்திரம் குறையாத ராஜேஷ், வீட்டில் இருந்த தனது மகன் மயங்க்கைக் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், கொலையை மறைக்க மகனின் சடலத்தைப் பெட்டிக்குள் திணித்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய ஊர்மிளா, வீடு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தேடிப் பார்த்தபோது பெட்டிக்குள் மகன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கதறி அழுதார். ஊர்மிளா அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த ராஜேஷை தேடிப் பிடித்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

