ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளதால் எம்.எஸ்.தோனி தலைமையில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய நிலையில் அதன் பின்னர் பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த 4 ஆட்டங்களிலும் இலக்கை துரத்தியிருந்தது.
இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 3 ஆட்டங்களிலும் 180 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்த சிஎஸ்கே அணி சிரமப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 220 ரன்கள் இலக்கை போராட்ட குணத்துடன் சிஸ்கே எதிர்கொண்டு 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. டாப் ஆர்டரில் டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திராவும், நடுவரிசையில் ஷிவம் துபேவும் பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும். டோனியும் தாக்குதல் ஆட்டம் (12 பந்துகளில், 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்கள்) மேற்கொண்டுள்ளது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதற்கிடையே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “குவாகாத்தியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அதிக வலியுடனேயே அவர், அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடினார். எக்ஸ்ரே பரிசோதனையில் ருதுராஜின் காயம் குறித்து ஏதும் தெரியவில்லை.
ஆனால் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனையில் அவரது முழங்கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர், தொடரில் இருந்து விலகி உள்ளார். எனவே தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு கேப்டனாக எம்.எஸ், டோனி செயல்படுவார்” என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. நடப்பு சீசனில் கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 239 ரன்கள் இலக்கை துரத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கொல்கத்தா கேகேஆர் அணிகள் மோதுகிறது. கேப்டன் பொறுப்பை டோனி ஏற்று இருந்தாலும், தற்போதைய நிலையில் சிஎஸ்கே வெல்லுமா? என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் ஒட்டுமொத்த அணியின் பீல்டிங், பேட்டிங், பவுலிங் என எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. டோனி தலைமையில் தான் சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் இன்று டோனிக்கு 43 வயதாகிவிட்டது. மற்ற வீரர்களின் ஆட்டமும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. அதே நேரத்தில் இன்று புது தெம்புடன் ஆடி வெற்றிபெற்றால் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய ஆட்டம் சிஎஸ்கேவுக்கு மிக முக்கியமானது.
டெல்லி சாதனை
நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்க டெல்லி நேற்றும் தனது வெற்றிப்பாதையில் மேலும் ஒரு மைல்கல்லை நட்டது. அதாவது இதுவரை ஆடிய 4 ஆட்டங்களிலும் டெல்லி வெற்றி பெற்று உள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் டெல்லி வெற்றிபெறுவது இப்போது தான் முதல் முறை. அதன் மூலம் டெல்லி புதிய சாதனை படைத்து உள்ளது.
நேற்று டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர், பெங்களூருவை பேட் செய்ய சொன்னார். அதன்படி பெங்களூரு 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.