கொச்சி பூட்னில் இருந்து இந்தியாவிற்கு போலி பதிவுகள் மூலம் வாகனங்களை கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்காணிக்கும் நோக்கில், கேரளா முழுவதும் பல இடங்களில் சுங்கத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்து மாவட்டங்களில் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மலையாளத் திரைப்பட நட்சத்திரங்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் வீடுகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன்படி, தற்போது தேவாரத்தில் உள்ள பிருத்விராஜின் வீட்டிலும், பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை இந்த கும்பல் நான்கு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
அதாவது, ராணுவத்தால் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் சிறிது காலத்திற்குப் பிறகு விற்கப்படும். இதுபோன்ற வாகனங்களை வாங்கி, இமாச்சலப் பிரதேசத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்யும் ஒரு குழு செயல்பட்டு வருவதாக புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. பின்னர் அத்தகைய குழுக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நபர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யும். இதைக் கண்டுபிடிப்பதே ஆபரேஷன் நம்கூர் என்று தொடங்கியுள்ளனர்.