தமிழக அரசின் திட்டங்களான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ அல்லது உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களையோ பயன்படுத்தக் கூடாது என தடை கோரி அதிமுக எம்.பி.யான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் திட்டங்களில் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்றும், அதேபோல அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றுடன் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் படங்கள், பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி திமுக சார்பில் அனுராதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் முறையீடு செய்தனர். அதையேற்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்தார்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கு தொடர்ந்து சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததுடன் ஒருவாரத்தில் அதை தமிழக அரசிடம் செலுத்தவும் உத்தரவிட்டது. அப்படி செலுத்தவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இதனால் சி.வி. சண்முகம் ரூ.10 லட்சம் அபராதத்தை தமிழக அரசிடம் செலுத்தினார். இந்த தகவலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதே போன்ற ஒரு வகர்கை அதிமுக வழக்கறிஞர் இனியன் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், வழக்கு தொடர்ந்த வக்கீல் இனியனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.