Skip to content

மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எஸ்பி அய்மன் ஜமால் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போன் கால்கள் மற்றும் வாட்ஸ்அப் வீடியோ கால்களில் பலரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அதிகளவு புகார்கள் வந்தது. விசாரணையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள், வசதியான முதியோர் ஆகியோரை குறிவைத்து இந்த துணிகர மோசடி நடந்து வருவது தெரியவந்தது.

தொடர்ந்து ராணிப்பேட்டை எஸ்பி உத்தரவின்பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் பணம் பரிமாறப்பட்ட விவரங்கள், அவர்களுக்கு வந்த செல்போன் அழைப்புகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தினர். மேலும் பிரத்தியேக மென்பொருள் ஆகியவற்றின் உதவியோடு புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் செல்போனை பயன்படுத்தி கடந்த ஓராண்டில் மட்டும் 542 சிம்கார்டுகள் பயன்படுத்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலரை மிரட்டி சைபர் குற்றவாளிகள் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்த சாலா சந்தீப் குமார்(27), சனபதிபிரதீப்(28), தாலா ராமகிருஷ்ணன்(29), சிங்கபள்ளி கனேஷ்(36), பாப்ல கிருஷ்ணகுமார்(36) ஆகிய 5 பேர் இன்று(நேற்று) கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய சிலரை தேடி வருகிறோம். கைதானவர்கள் மேலும் பல மாநிலங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராணிப்பேட்டை எஸ்பி அய்மன்ஜமால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் எந்த ஒரு அரசு அதிகாரியும் வாட்ஸ்அப் மூலம் உங்களை விசாரணை செய்ய மாட்டார்கள். அடையாளம் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கித் தகவல்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம். சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!