டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தாலுக்காக்கள் மிகவும் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதே போல் 24 கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 14 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முகாமிலும். 800 பேர் தங்கும் அளவிற்கு வசதிகள் உள்ளன.
மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து 35 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் மக்களை மீட்டு கொண்டு வர பைபர் படகுகள், புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டால், மரங்களை அறுத்து அப்புறப்படுத்த மரம் அறுக்கும் இயந்திரம், டார்ச் லைட், ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

