Skip to content

புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை

கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை துவங்கியதை தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் தற்போது அடை மழை பெய்து கொண்டு வருகிறது.இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), அடுத்த 15 நாட்களில் (அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 05) வங்காள விரிகுடாவில் இரண்டு தனித்தனி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அல்லது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக்கூடும் என்று வானிலை குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும்,  அப்போது அதி கன மழையுடன் மணிக்கு சுமார் 55 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாவட்டத்தின் புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த சூழலில், பேனர்கள், கட் அவுட்கள், பதாகைகள் ஆகியவை காற்றின் தாக்கத்தில் சேதமடைந்து பறந்து விழக்கூடிய வாய்ப்புகள் வெகுவாய் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கு அபாயகரமான விபத்துகள் மற்றும் காயங்கள் ஏற்படுவதுடன், போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்புப் பாதைகளில் இடையூறு மற்றும் மின் இணைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளிட்ட பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஆகியவை நேரிட வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து விதமான பேனர்கள், கட் அவுட்கள், பதாகைகள் போன்றவை, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் இன்று முதல் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன், உடமைகள்/சொத்துக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர்
கேட்டுக்கொண்டுள்ளார். மேற்படி தடையாணையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு எண்கள் 51, 55 & 56 உள்ளிட்டவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 9488981070 என்கிற எண்ணில் வாட்சப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!