நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. முதல் கட்ட அமர்வில் சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.
கடந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யும் நோட்டீசை அளித்திருந்தனர்.
நாடாளுமன்ற 2-வது கட்ட அமர்வு நேற்று தொடங்கியபோது சபாநாயகருக்கு எதிரான விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டு இருந்தது. மேற்கு ஆசிய போர் சூழல் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் விவாதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. சபை கூடியதும் மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் பதில்களை அளித்தார். அப்போது மேற்கு வங்காளத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு விவசாயிகள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் 25 நிமிடங்களுக்கு பிறகு சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகோய், மணிஷ் திவாரி உள்ளிட்ட 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட இந்த தீர்மானத்தில், சபாநாயகர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த தீர்மானம் கொண்டுவரும்போது அவை நடவடிக்கையை யார் வழி நடத்த வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் கூறும்போது கடந்த பல ஆண்டுகளாக துணை சபாநாயகரை அரசு நியமிக்கவில்லை. அரசியலமைப்பு வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்களவைக்கு தலைமை தாங்க ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. தலைவர் குழுவில் உறுப்பினராக உள்ள ஜெகதாம்பிகாபால் தலைமை தாங்குவார் என்று மத்திய மந்திரி கிரன் ரிஜ்ஜு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முகமது ஜாவேத் சபாநாயகர் ஓம்பிர்லாவை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. 10 மணி நேரம் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது. கடுமையான விவாதித்தின்போது அமளி ஏற்பட்டது. இந்த அமளியால் சபை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கிய உடனே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அளித்தனர். சாதாரண மக்கள் அன்றாட உணவைச் சமைக்கக் கூட சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், முன்பதிவு செய்தும் பல வாரங்களாக விநியோகம் செய்யப்படாமல் தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மக்களவையின் மையப்பகுதிக்கு வந்த காங்கிரஸ், திமுக மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
“ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அடிப்படைத் தேவையான எரிவாயுவை தட்டுப்பாடின்றி வழங்கத் தவறிய மத்திய அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என எதிர்க்கட்சிகள் ஆவேசமாக முழக்கமிட்டன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அவையில் ஓங்கி ஒலித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் அவையில் அமைதி திரும்பவில்லை. இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முயன்ற அரசு தரப்பு மந்திரிகள் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், மந்திரிகளின் பதிலில் திருப்தியடையாத எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தொடர்ந்து நிலவி வரும் இந்தச் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மோதல், வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் அணிதிரண்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து தலைமை தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது வாக்கு திருட்டுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள், தேர்தல் ஆணையரின் பாரபட்சமான போக்கை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்களின் கையெழுத்துடனும் அல்லது மக்களவையில் 100 எம்.பி.க்களின் கையெழுத்துடனும் நாளைக்குள் (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையர் என இரு முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே நேரத்தில் களம் இறங்கியுள்ளதால் நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

