மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளன.
இதனால் நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 25 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினசரி உணவு தேவைக்காக ஓட்டல்களை நம்பியுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல் தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உகாதி பண்டிகை கொண்டாடப்பட்ட சூழலில், இந்த திருட்டு சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோவில் ஹெல்மெட் அணிந்த 2 நபர்கள் ஒரே ஸ்கூட்டரில் ஒரு வீட்டின் முன்பு வந்து நிற்கின்றனர். ஒரு நபர் வீட்டிற்கு வெளியே நிற்க, மற்றொரு நபர் ஸ்கூட்டருடன் வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே செல்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து 2 சிலிண்டர்களுடன் அவர் வெளியே வருகிறார். தொடர்ந்து இருவரும் ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் பெங்களூருவின் பேகூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில், வீடு புகுந்து சிலிண்டர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

