Skip to content

புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை..

2017ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியேவந்தார். இந்தநிலையில் குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவரது தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் மகளிர் கோர்ட்டு தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தஷ்வந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பில், “கோர்ட்டுகள் ஒவ்வொரு வழக்கையும் சட்டப்படி தீவிரமாக விசாரிக்க வேண்டும். அறக்கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்கக்கூடாது. வெகுஜன உணர்ச்சிகளாலும், புற நெருக்கடிகளாலும் கோர்ட்டுகள் ஆட்கொள்ளக்கூடாது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதை தொடர்ந்து, சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!