நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்திருந்தது. இந்த இரட்டைத் தோல்வி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடரை இழந்தது குறித்து செய்தியாளர்களிடம் ஓபன் டாக் நடத்தினார். “இந்தத் தொடரில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது” என்று கூறிய அவர், தோல்வியில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும், அணியை பல இடங்களில் மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தோல்வியை பாசிட்டிவ் வகையில் பார்த்தபோது, விராட் கோலியின் பேட்டிங் எப்போதுமே அணிக்கு பலமாக இருப்பதாக சுப்மன் கில் பாராட்டினார். மேலும், 8-வது இடத்தில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா சிறப்பாக பேட் செய்ததையும், இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசியதையும் அவர் குறிப்பிட்டார்.இந்தத் தோல்வி இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்பு நடைபெறும் இத்தொடர், அணியின் பலவீனங்களை வெளிக்காட்டியுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இளம் அணி, இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று, அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.தமிழக ரசிகர்கள் உட்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கேப்டன் சுப்மன் கில்லின் நேர்மையான பேச்சும், அணியை மேம்படுத்துவதற்கான உறுதியும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. வரும் தொடர்களில் இந்திய அணி மீண்டு எழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

