Skip to content

டில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து நகை -பணம் கொள்ளை- தஞ்சையில் பரபரப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது . இந்த நிலையில் நேற்று வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அங்கு சென்று வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்தனர். பின்னர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் . பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.
இன்று காலை ஏ.கே.எஸ். விஜயன் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார் . அப்போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் ‌ . விசாரணை முடிவில் தான் கொள்ளை போன நகை , பணத்தின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவரும். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!