Skip to content

அடைமழை……..டெல்டா மாவட்டங்களில் 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்….. மூழ்கியது

வங்க கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு  பகுதி  தற்போது ஆழ்ந்த காற்றகழுத்த மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி  நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 12 மணி நேரத்தில்   அது புயலாக  உருவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. அந்த புயலுக்கு   சவுதி அரேபியா சிபாரிசு செய்த பெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த புயல் சரியாக எந்த இடத்தில் கரை கடக்கும் என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் இந்த புயல் சின்னம் காரணமாக  தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம்,  மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால், புதுச்சேரி  பகுதிகளிலும்   கனமழையும் மற்ற மாவட்டங்களில் நசநசவென விடாமல் தூறிக்கொண்டும் இருக்கிறது.

சென்னை கடற்கரையில் இன்று காலை முதல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டதுடன், பலத்த காற்றும் வீசுகிறது. இதனால் திருச்சி மற்றும் டெல்டா  மாவட்டங்கள் உள்பட  9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.  புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பட்டய  தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில்  நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இன்று காலை 6 மணி வரை திருவாரூர்,  மயிலாடுதுறை மாவட்டங்களில்  பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

திருவாரூர் 122.2
நனனிலம், நன்னிலம்95.8
குடவாசல் 71.6
வலங்கைமான் 71.4
மன்னார்குடி 93
நீடாமங்கலம் 91.8
பாண்டவையாறு 65.2
திருத்துறைப்பூண்டி 104.2
முத்துப்பேட்டை  95.4

மயிலாடுதுறை 93 மி.மீ.,

மணல்மேடு 74 மி.மீ.,

சீர்காழி 98 மி.மீ.,

கொள்ளிடம் 96.40மி.மீ.,

தரங்கம்பாடி 102.10 மி.மீ.,
செம்பனார்கோயில் 72.60மி.மீ.,

இதுபோல  தஞ்சை, திருவாரூர், நாகை  மாவட்டங்களிலும்  நேற்று முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால்  டெல்டா மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில்  மாநகர பகுதிகள் மற்றும் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆலக்குடி, வல்லம், கும்பகோணம், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, மேலக்காவேரி, திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருகிறது. சம்பா பயிர்கள் நன்கு வளர்ந்து 50 நாட்களை கடந்துள்ளது. தாளடி பயிர்கள் 20 நாட்கள் ஆன நிலையில் இந்த மிதமான மழை சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து தண்ணீர் தேங்கினால் பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள்  தெரிவித்தனர். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு தண்ணீர் தேங்கவில்லை என்ற போதிலும் மழை தொடர்ந்து  பயிர்கள் பாதிக்கப்படும்  ஆபத்து உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை, நன்னிலம் பகுதிகளில்  சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுபோல நாகை,  கடலூர், மாவட்டங்களிலும் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.  இவற்றில் பல இடங்களில் பயிர்களுக்கு மேல் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது. மழை நீடித்தால் இந்த பயிர்கள்  அழுகும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!