மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவேரி எக்ஸ்பிரசில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. அத்துடன் தமிழக வீரர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவில்லாதவர்கள் ஏறி அமர்ந்து காண்டனர். இதனால் அவர்களால் ரயில் பெட்டியை கூட நெருங்க முடியவில்லை. எனவே தமிழக வீரர்கள் வாரணாசி ரயில் நிலையத்திலேயே அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தங்களை மாநில அரசு அழைத்துவர உதவ கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தி துணை முதல்வர் உதயநிதியின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் தமிழ்நாடு விளையாட்டு ஆணைய மேம்பாட்டு ஆணையர் மேகநாதரெட்டி மூலம் தமிழக வீரர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்கள் இன்று விமானம் மூலம் பெங்களூரு வழியாக சென்னை வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.