Skip to content

கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம் பரிவார தெய்வங்களின் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் பிரசித்தி பெற்ற சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. காகம் பறவாமலை, ஐவர்மலை, வாட் போக்கி மலை என பல்வேறு சிறப்பு பெயர்கள் கொண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் விழா நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. மலை உச்சியில் உள்ள கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், தண்டபாணி,

விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், வைரப் பெருமாள், கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்தது அடுத்து இன்று குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.

புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நாடிசந்தனம், லட்ச்சார்ஜனை, மகா தீபாரனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹுதி உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை இரண்டாம் கால யாகவேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீரினை ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் மூலவர் சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. குலதெய்வமாகவும், குடிப்பாட்டு தெய்வமாகவும் கொண்ட உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த சுமார் 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

error: Content is protected !!