ஓடும் பஸ்ஸில் வைர வியாபாரியிடம் ரூ 14 லட்சம் வைரங்கள் திருட்டு.. 3 பேர் கைது
மதுரை தொட்டியம் கிணறு சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். (69).இவர் வைர வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று திருச்சி ஜான் பாஷா தெரு பகுதியில் உள்ள வைர நகைகள் சோதனை செய்யும் கடைக்கு வந்தார்.அங்கு தனது வைரங்களை சோதனை செய்த பின்னர்,தனது சட்டை பாக்கெட்டில் வைரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, திருச்சி தேவர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸில் ஏறினார்.பஸ் சிறிது தூரம் சென்றவுடன் பாக்கெட்டில் இருந்த வைரங்களை காணவில்லை.உடனடியாக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய செல்வராஜ் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் வைரங்களை திருடியதாக மதுரை மேலூர் பாண்டியன் நகரை சேர்ந்த முகமது சையது இப்ராகிம் ( 28 ),மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது 32 ),மதுரை உத்தங்குடியை சேர்ந்த பாண்டியன் (60) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என காந்தி மார்க்கெட் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பால் வாங்க சென்ற வாலிபர் மீது தாக்குதல்… 3 பேர் கைது
திருச்சி இ.பி ரோடு கல்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 27. இவர் பால் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வாழைக்காய் மண்டி அருகே கடைக்கு சென்றார். அப்போது அங்கு நின்ற நான்கு வாலிபர்கள் இவரது வீட்டை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.உடனே மணிகண்டன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் கல்லாலும், கையாலும் அடித்து தாக்கினர். இதில் காயமடைந்த மணிகண்டன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காந்தி மார்க்கெட் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு இவரை தாக்கிய ஸ்டீபன், அரவிந்த், அருண்குமார், அஜித்குமார் ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினார். இதில் ஸ்டீபன், அரவிந்த், அருண்குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
தபால் ஊழியர்களை தாக்கி,அலுவலகம் சூறை
திருச்சி, தில்லை நகரில் தபால் அலுவலகம் உள்ளது.தபால் அலுவலகத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தில்லை நகர் தூக்கு மேடை தெருவை சேர்ந்த முனியாண்டி (வயது 20 )என்ற வாலிபர் தள்ளிவிட்டு உள்ளார்.இதை தபால் அலுவலக ஊழியர்கள் தட்டிக் கேட்டுள்ளனர்.அப்போது ஆத்திரமடைந்த முனியாண்டி தபால் அலுவலக ஊழியர்களை தாக்கி,தபால் அலுவலகத்தின் கதவு ஜன்னல் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.உடனே இதுகுறித்து திருச்சி தபால் நிலைய அதிகாரி லட்சுமி பாய் (50). தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து ஊழியர்களை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்து ,அலுவலக கதவு, சன்னலை சேதப்படுத்திய முனியாண்டியை கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் பார் ஊழியர் மயங்கி விழுந்து சாவு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு விடுதி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் பாண்டி (40). இவர் கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவை பஸ்ஸில் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தார். பின்னர் தஞ்சை செல்வதற்காக பஸ் ஏற நின்று கொண்டிருந்தார். அப்போது சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பால் பூத் அருகே பாண்டி மயங்கி விழுந்தார்.இதுகுறித்து பஸ் ஸ்டாண்டில் இருந்த பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் பாண்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

