Skip to content

பாரதிராஜா- தமிழ்த்திரையுலகின் கலெக்ட் கிளாசிக் இயக்குனர்

  • by Authour

தமிழ்நாட்டின்  இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் எப்போதும் பச்சைபோர்வை போர்த்தியிருக்கும்  ஒரு அழகிய  கிராமம் தான் தேனி அல்லிநகரம்.  ஊரின் பெயரில் நகரம் இருந்தாலும், அது பாரதிராஜா பிறந்த 17.7.1941ல்  கிராமம் தான்.

இந்த  ஊரைச்சேர்ந்த  நடுத்தர குடும்பமான பெரியமாயத்  தேவர் –  மீனாட்சி என்கிற கருத்தம்மாள் தம்பதியாின் மகனாக பிறந்தவர்  இன்றைய இயக்குனர் இமயம்  பாரதிராஜா.  ஆனால்  அவருக்கு பெற்றோர் இட்ட பெயரோ சின்னச்சாமி.  அவர் தமிழ்த்திரையுலகின் பெரியசாமி  ஆவார் என்று அவரது பெற்றோர் கூட அன்றைய தினம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஊரில் நாடகங்கள், கூத்துகள் பார்த்த சின்னசாமிக்கு  தானும் திரைப்படத்துறையில் ஜொலிக்கணும் என்ற எண்ணம் ஏற்பட்டது.  சினிமா ஆசை ஏற்பட்டவர்களுக்கு  எல்லாம் கனவு உலகம் சென்னை தானே.  எனவே 70களில் சென்னைக்கு வந்தார் நம்ம சின்னசாமி.

பலரிடம் உதவி இயக்குனராக  பணியை தொடங்கினார். 1977ல்  16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு மாபெரும் இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார்.  முதல் பந்தே சிக்சர் என்பது போல  அடித்து நொறுக்கினார். சினிமா ஜாம்பவான்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

அதுவரை ஒரு ஸ்டூடியோவுக்குள், ஒரு அரங்கினுள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவின்  கூண்டுக்கிளி தன்மையை  அடித்து நொறுக்கினார்.   இதோ  பரந்து விரிந்த உலகம். உங்களுக்கானது என புதிய  உலகை திறந்து காட்டினார் நம் பாரதி ராஜா. 1995 வரை தமிழ்த்திரை உலகில் இவரது ராஜாங்கம் தான் .

தமிழ் சினிமாவில்  இதுவரை யாரும் சொல்லாத, சொல்ல துணியாத  பல கருத்துக்களை  திரையில் சொன்னார் பாரதிராஜா.  உண்மை தன்மை மாறாத கிராமப்புற மக்கள் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான சித்தரிப்புகள் இவரின் திரைப்படங்களில் வெளிப்பட்டன.

இவரின் முதல் படமான 16 வயதினிலே” தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய மைல்கல் படமாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை கலை திரைப்படமாக வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக கமர்சியல் வெற்றிகரமாக கலர் திரைப்படமாக தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பிக்க உதவியாக இருந்தது என இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதில்  கமல் கதாநாயகனாககவும், ரஜினி வில்லனாகவும், ஸ்ரீதேவி கதாநாயகி மற்றும் கவுண்டமணி  முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தனர். இதுவும் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக  ‘அலைகள் ஓய்வதில்லை’ பள்ளி பருவம் தாண்டாத ஒரு ஏழை பிராமண கதாநாயகனுக்கும் கிறிஸ்தவ பெண்ணான கதாநாயகிக்கும் இடையே மலரும் பதின் பருவ காதலை பற்றியும் , வேற்று மதத்தை சார்ந்தவர்கள்  காதலிப்பதனால் அப்போதைய காலகட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையை பற்றியும், இறுதியில் மதமே தேவை இல்லை என்று மத அடையாளங்களை அறுத்தெறிந்து விட்டு  காதல் போதுமே என்று இந்த திரைப்படத்தின் வாயிலாக  கடலோரமாக கவித்துவமாக கூறியிருப்பார் பாரதிராஜா.

அன்றைய காலகட்டத்தில் அலைகள் ஓய்வதில்லை  திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்  புரட்சிகரமாக பார்க்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரே பாரதிராஜாவை அழைத்து பாராட்டினார்.  அரசியல்வாதிகள்  யாரும் சொல்ல  துணியாத கருத்தை  இந்த திரைப்படத்தின் வாயிலாக சொல்லி விட்டாய் என்றார்.

நடிகர் கார்த்திக், ராதா  இருவரும் அறிமுகம் இந்த படத்தில் தான்.  புதுமுகங்களா இவர்கள்? என   ஆச்சரியப்பட வைத்தனர். காரணம்  பாரதிராஜா பட்டறையில் தீட்டப்பட்ட வைரங்களாக  வெளிவந்தனர் இருவரும்.

பாரதிராஜான்னாலே கிராமத்து கதைக்களமாகத்தான் இருக்கும் என அப்போது  ஒரு பேச்சு வெளிவந்தது. அதை    சிவப்பு ரோஜாக்கள், ”டிக் டிக் டிக்” மூலம்  உடைத்தெறிந்தார். இப்படியும் என்னால் செய்து காட்ட முடியும் என எல்லா பரிணாமங்களிலும்  ஜொலித்தார் பாரதிராஜா.

வேதம் புதிது மூலம்  புதிய வேதத்தை சொன்னார்  பாரதிராஜா …..சாதி என்ற தீயை அணைக்க  அனல் தெறிகும் வசனங்களை ஒரு சிறுவனை விட்டு பேசவைத்தார்.

பாரதிராஜாவின்  வெற்றி பயணத்தில்  “முதல் மரியாதை…அன்றைய காலகட்டத்தில் புதுமையான, முற்றிலும் மாறுபட்ட  கதைக்களம் கொண்ட திரைப்படம்.  ஒரு இளம் பெண்ணிற்கு திருமணமான , அதே நேரத்தில் மனைவியின்  சுகம்  அறியாத ஒரு முதிர்ந்த ஆணின் மீது ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பையும், அவர்களின் உள்ளுணர்வுகளையும்   வெளிப்படுத்தி இருந்தார்.

கிராம  மக்களின்  ஏச்சு, பேச்சுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும்,   நகைச்சுவைகளுடன் காட்சிகள் அமைக்கப்பட்ட படம்.  இயக்குனர் இமயமும், நடிப்பு இமயமும் சங்கமித்த திரைப்படம் இது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ராதா, வடிவுக்கரசி போன்ற மூத்த நடிகர்கள் நடித்து அன்றைய காலகட்டத்தில் வெற்றி திரைப்படமாக வந்தது இந்த முதல் மரியாதை. இப்படத்தில் வரும் பாடல்கள் இன்று வரை பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள். குறிப்பாக “ராசாவே உன்ன நம்பி” என்ற பாடல் இன்று வரை சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முதல் சீரியல் கில்லர் படம் என்றாலே அது பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் என்ற  படம் தான்  என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சிவப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம்  வழக்கமான படங்களைத் தாண்டி மாறுபட்ட  திரில்லர் காட்சிகளுடன் சூப்பரா படம் உருவாகி இருக்கும். இன்று பல சைக்கோ சீரியல் கில்லர் திரைப்படங்கள் அதற்கெல்லாம் ரெஃபரன்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.

தமிழ்   திரையுலகின் பல  கதாநாயகிகளை இவர் தான் அறிமுகம் செய்தார். பல இயக்குனர்களை உருவாக்கினார். ஒரு கட்டித்தங்கம் தான் பல ஆபரணங்களை உருவாக்க முடியும். அப்படித்தான் பாரதிராஜா என்ற தங்கத்தில் இருந்து வந்தவர்கள் இன்று ஆபரணங்களாக  இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என  மூன்று மொழிகளில்  திரைப்படங்கள் இயக்கிய பாரதிராஜாவின்  படைப்புகளுக்கு  ஒரு சிறிய சான்றுகள் தான் இவை. அவரது படைப்பு ஒவ்வொன்றும்  ஒரு கதை சொல்லும், ஒரு பாடம் போதிக்கும்.

பத்மஸ்ரீ விருது, சிறந்த இயக்குனருக்காக பாரதிராஜா அவர்கள் தேசிய விருது, தமிழ்நாடு மாநில விருது, ஃபிலிம் ஃபேர் சவுத், நந்தி விருது, போன்ற விருதுகளை வாங்கி குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். தற்போது பாரதிராஜா அவர்கள் இயக்குனராக மற்றும் தற்போது வரை முன்னணி நடிகரின் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார். இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கு இவர் திரைப்படங்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறது.  இவரது திரை பயணங்கள் தொடர வேண்டும்.

இன்று பாரதிராஜாவுக்கு  84வது பிறந்த நாள்.  அவர் நூறாண்டு வாழ வாழ்த்துவோம்.

error: Content is protected !!