Skip to content

மதுரை ஆதீனத்தை பதவி நீக்கவேண்டும்- இந்து மக்கள் கட்சி கோரிக்கை

 மதுரை ஆதீனம் சென்னை    சென்றபோது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக  ஒரு மாநாட்டில்   அவரே கூறினார்.  இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆதீனம் தவறான தகவல்களை கூறியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மத போதலை  உருவாக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்   மதுரை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார்  அளித்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டுக்குச் செல்லும் போது உளுந்தூர் பேட்டை அருகே வாகன விபத்து ஏற்பட்டதற்கு காரணம் நம்பர் பிளேட் இல்லாத குல்லா போட்ட தாடி வைத்தவர்கள் என்றும், வெகு தூரம் துரத்தி வந்து சாலைத் தடுப்பை உடைத்துவந்து எங்கள் கார் மீது மோதி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் என்றும் என்னை (ஆதீனத்தை) கொல்ல சதி என்றும் மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

ஆனால் காவல்துறை தற்போது அந்த வாகன விபத்து நடந்த வீடியோ காட்சியை ( CCTV) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் மதுரை ஆதீனம் வந்த வாகனமும் லேசாக உரசி உள்ளது தெரிகிறது.
இதில் ஆதீனம் வந்த வாகனம் மிக வேகமாக சென்றபோது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே இதனை பெரிய பிரச்சினை ஆக்கி என்னை கொல்ல தாடி வைத்த குல்லா போட்ட மத தீவிரவாதிகள் சதி திட்டமிட்டுள்ளார்கள் என்று மதுரை ஆதீன மடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும், மதப் பிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் , வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விஷப் பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் மதுரை ஆதீனம். இதற்காக மதுரை ஆதீனத்தை இந்து மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

‘என் வாகனத்தின் மீது இடித்தவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பார்கள்’ என்று கூறும் ஆதீனம், நேர்மையாக தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதீனத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதீனத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் எழுகிறது. மதுரை ஆதீனம், ஒரு மதத்தின் மீது பழி போட்டு, ஒரு தவறான பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது மதுரை ஆதீன மடத்துக்கு மட்டுமல்ல திருஞானசம்பந்தர் பக்தர்களாகிய எங்களுக்கும் அவமானமாக உள்ளது.

இதற்கு முன்பாக ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீதும், குத்தகை தாரர்கள் மீதும் ‘என்னை கொல்ல சதி நடக்கிறது’ என்று இதே ஆதீனம் கொலைக் குற்றச்சாட்டு கூறினாரே தவிர, அந்தக் கொலை மிரட்டல் சம்பந்தமாக யார் மீதும் இதுவரையில் முறையாக காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.

இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதீனமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

காவல்துறை பாதுகாப்புக்காகவோ அல்லது விளம்பர நோக்கத்துக்காகவோ மதுரை ஆதீனத்தை பின்னால் இருந்து தவறாக யாரேனும் இயக்குவது போல் தெரிகிறது. மதுரை ஆதீனத்துக்கு பின்னால் ஒரு சதிகார கூட்டமே இருக்கிறது.

கடந்த 2012-ல் நித்தியானந்தாவை 293-வது ஆதீனமாக நியமிக்கும் பொழுது அதனை எதிர்த்து ஒரு வருடமாக போராடி மதுரை ஆதீனமடத்தை விட்டு நித்தியானந்தாவை கஷ்டப்பட்டு வெளியேற்றினோம்.

அதன் பிறகு 292-வது சன்னிதானம் இறக்கும் பொழுது மதுரை ஆதீனமடத்துக்கு 293-வது சன்னிதானமாக இவர் தான் வரவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் ஆதரவளித்தோம். ஆனால் மதுரை ஆதீனத்தின் நடவடிக்கைகள் சரி இல்லாத காரணத்தால் நாங்கள் மடத்துக்குச் செல்வதையே நிறுத்திவிட்டோம்.

மேலும் மதுரை ஆதீனமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதீன மடத்தில் ‘தினந்தோறும் அன்னதானம்’ போன்ற, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமாலும், மின்சார சிக்கனம் என்ற பெயரில் ஆதீன மடத்தை இருளில் போடுவதும், மடத்துக்குள் யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்று கண்காணிக்கும் சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும், மதுரை ஆதீனமாக பதவி நியமனம் செய்த திருவாவடுதுறை ஆதீனத்தையும், தர்மபுர ஆதீனத்தையும் கேவலமாக பேசுவதும், பிராமண சமூகத்தையும், அர்ச்சகர்களையும் இழிவு படுத்திப் பேசுவதும், மடத்துக்கு ஆசி வாங்க வரும் பக்தர்களை அவமரியாதை செய்வதும், மடத்தின் சொத்துக்களில் இருந்து வரும் வாடகை, ஒத்திக்கு இருக்கும் நபர்களிடம் பணம் வசூல் செய்வது என்றும் மதுரை ஆதீனம் செயல்படுகிறார்.

1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான சுவாமி திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல், வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதீனத்தையும், அவருடன் வந்தவர்களையும், வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தெளிவுபடுத்த வேண்டும்.

சமீபகாலமாக மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும், மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதீனத்துக்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் தெரிகிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதீனமாக இருக்க தகுதியற்றவர்.

எனவே மதுரை ஆதீன மடத்தின் நலனுக்காகவும், இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்து சமயத்தை பாதுகாக்கவும், இந்து சமய ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகவும் மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் என தானமாக கொடுத்த சுமார் ரூ.1000 கோடிக்கு மேல் இருக்கும் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களையும், ஆதீன மடத்தின் புகழையும், புனிதத்தையும் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு மதுரை ஆதீன மரபுகளை மீறி செயல்படும் 293-வது திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர். அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!