Skip to content

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தான் தெரிவிக்கும் வரை பொறுமையாக காத்திருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேரங்கள், ஏற்கெனவே இருந்த அரசு செய்த சாதனைகள், திமுக அரசின் அவலங்கள், தற்போதைய அரசின் சாதனைகள் என பிரச்சாரங்கள் பரபரத்து வருகின்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்டவை உள்ளன. அது போல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து போட்டியிடும். தவெக கூட்டணி கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது. அது போல் தேமுதிக, பாமக, அமமுக ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அது போல் ஓபிஎஸ்ஸின் அதிமுக உரிமை மீட்பு குழுவும் கூட்டணி குறித்து இனிதான் அறிவிக்கிறது. திமுகவுக்கு சாதகம் தவெகவால் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இதனால் திமுக கூட்டணி உற்சாகமாக உள்ளன. எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படி பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைகளுக்கு தொடர்ந்து செங்கோட்டையன் ஆப்சென்ட் ஆகி வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 மாத கால அதிருப்தி கடந்த 6 மாதங்களாக செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வருகிறார் என சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக- பாஜக கூட்டணி அமையாத போது, செங்கோட்டையன் டெல்லி சென்றிருந்தார். இரு முறை நிர்மலா சீதாராமனை சந்தித்திருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைகிறார் என்றெல்லாம் பேச்சு அடிப்பட்டது.

அதிமுகவுக்கு செங்கோட்டையன் தலைமையேற்க டெல்லி பாஜக தலைமை விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது கூட்டணி அமைந்த பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுகவை சேர்ந்த ஒருவர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னது கூட செங்கோட்டையனை மனதில் வைத்துக் கொண்டுதான் என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த அதிமுக பிரச்சார பயணத்திற்கு கூட செங்கோட்டையன் வராததால் அவர் மீது மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரங்களிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி செங்கோட்டையன் மனம் திறந்து பேச போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வரும் 5 ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேச போகிறேன். என்ன பேச போகிறேன் என்பதை அறிய பொறுத்திருங்கள்” என்றார். இதனால் கொங்கு மண்டலமே பரபரத்த நிலையில் அன்றைய தினம் அவர் எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவிப்பார் என சொல்லப்படுகிறது.

ஒரு வேளை செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து விலகுவாரா, இல்லை ஓபிஎஸ்ஸுடன் இணைவாரா, அல்லது பாஜகவில் இணைவாரா என்றெல்லாம் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவை எல்லாவற்றையும் அறிய செப்டம்பர் 5ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

error: Content is protected !!