Skip to content

தனிப்பட்ட விரோதம் காரணமாக டிஎஸ்பியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதி

தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதியானது. ஐகோர்ட் உத்தரவுப்படி நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்கும்படி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ் பி, டி எஸ் சி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது உறுதியாகி உள்ளது. மேலும் நீதிபதியின் முன்னாள் பி.எஸ்.ஓ. மாமனார் பேக்கரியில் நடந்த தகராறில் வழக்கு பதிய டி.எஸ்.பி.க்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால், பேக்கரியில் தகராறில் ஈடுபட்டவர்கள் சமரசமாக சென்றதால் வழக்குப் பதியப்படவில்லை. வழக்குப் பதியாததை காரணம் காட்டி டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி செம்மல். அத்துடன், காஞ்சி உணவு பாதுகாப்பு அலுவலரை, பேக்கரியில் சோதனை நடத்த நீதிபதி கட்டாயப்படுத்தியதும் அம்பலம் ஆகியுள்ளது. இந்த நிலையில், முன்விரோதத்தால் நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்ததுஉறுதியானதால் நடவடிக்கை பாய்கிறது. நீதிபதி செம்மல் மீதான விசாரணை அறிக்கையை மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்க பதிவாளருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!