Skip to content

விஜயுடன் திவாகரன் சந்திப்பால் பரபரப்பு- சசிகலா அதிரடி திட்டம்

தமிழ்நாட்டில் சட்டமன்ற பொது தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக – பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு, பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் எடப்பாடியின் விடாப்பிடியான எதிர்ப்பு காரணமாக சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறவில்லை. இந்த சூழ்நிலையில் அரசியலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள சசிகலா விரும்புகிறார்.

அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார். இதையடுத்து சசிகலா. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனிக்கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் பிப். 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகும். அந்த நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம். மதுரையில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தனிக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தனிக்கட்சி துவங்கிய பின், தவெகவுடன் கூட்டணி வைக்க சசிகலா முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பாக சசிகலாவின் தம்பி திவாகரன், விஜயை சந்தித்து பேசி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே தினகரன், தனக்கு துரோகம் செய்து விட்டதாக சசிகலா கருதுகிறார். எனவே அமமுகவை உடைக்க அவர் திட்டம் வகுத்துள்ளாராம். அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இதற்கு பலர், சசிகலா கட்சியில் இணைய சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். அதேபோல் அதிமுக மாஜி அமைச்சர்கள் சிலரிடமும், சசிகலா பேசி உள்ளாராம். சசிகலா கட்சி ஆரம்பித்த பின், அமமுக உடையும். அதிமுகவில் இருந்தும் பல மாஜி அமைச்சர்கள், சசிகலாவுடன் சேருவார்கள் என்று சசிகலா தரப்பில் கூறப்படுகிறது. சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் அமமுக மட்டுமின்றி அதிமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!