Skip to content

தீபாவளி பலகாரம்…ரூ.5 கோடி கலப்பட பொருட்கள் அழிப்பு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாநிலம் தழுவிய சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கடந்த 8 முதல் 17ம் தேதி வரை தீபாவளி சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநிலம் முழுவதும் 6,075 ஆய்வுகள் மற்றும் 2,740 திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, 3,767 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன. இந்த அதிரடி சோதனையில், சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான கலப்படப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில், எளிதில் கெட்டுப்போகும் தன்மை கொண்ட ரூ.3 கோடி மதிப்பிலான சுமார் 1,871 குவிண்டால் தரமற்ற உணவுப் பொருட்கள், மீண்டும் சந்தைக்கு வராமல் தடுக்கும் நோக்கில் உடனடியாக அழிக்கப்பட்டன. குறிப்பாக, லக்னோவில் இனிப்புக் கடைகள், உற்பத்தி நிலையங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகளில் இந்த சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன.
இதில் 5,000 கிலோவுக்கும் அதிகமான கோவா, இனிப்புகள் மற்றும் பிற பால் பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், 223 கிலோ தரமற்ற நெய்யும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களை வாங்கும் போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் இருந்தால், உணவுப் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!