தேமுதிகவின் 19 ம் ஆண்டு விழாவையொட்டி பொதுக்குழு செயற்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சத்தை கே.வி.மஹாலில் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். மேடையில் விஜயகாந்த் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. பொதுச்செயலாளராக மீண்டும் பிரேமலதா தேர்வு செய்யப்பட்டார். இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரனும், பொருளாளராக சுதீசும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 9ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும் என்றும் பிரேமலதா அறிவித்தார்.
மற்ற அறிவிப்புகள் எல்லாம் நாளை தலைமைக்கழகத்தில் மே தினத்தையொட்டி அறிவிக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்தார். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியாற்றுவோம். நானும், விஜயபிரபாகரனும் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜயகாந்த்துக்கு சிலை திறக்கப்படும். தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜயபிரபாகரனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரேமலதா கூறினார்.