விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த 17ஆம் தேதி (17.11.2025) கடிதம் எழுதியிருந்தார். அதில், “காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப் பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை. கரீஃப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து

கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்
இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் முன்வைத்த நெல் கொள்முதல் ஈரப்பத தளர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் மதச் சார்பற்ற முற்போக்குக்

கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காமல், நிவாரணமும் அளிக்காமல் டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி’களின் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் 23.11.2025 அன்று தஞ்சாவூரிலும், 24.11.2025 அன்று திருவாரூரிலும் காலை 10.00 மணியளவில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

