தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 2026 பேரவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பிரசார பணிகள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… தடங்கல் எப்போதும் இருக்கும், அதை உழைப்பால் வெல்லுங்கள். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது பாஜக. அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது பாஜக. தலைமைக்கே சிக்கல் வரும் என்பதால் பாஜக கூட்டணியை ஈபிஎஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். பாஜகவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வோம். அரசியல்ரீதியாக நம்மை வெல்லமுடியாதவர்கள், மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அரட்டல் மிரட்டல் உருட்டலுக்கு உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல்ரீதியாக நாம் எதிர்கொள்வோம். இனி சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக நாட்களை செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி , வார்டு வாரியாக செல்லவேண்டும். வேட்பாளரை தலைமை முடிவு செய்யும். ஜூன் 1ம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.
வேட்பாளர் யார் என்பதை திமுக தலைமை முடிவு செய்யும் . வெற்றி பெறுபவரே நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவருக்கே வாய்ப்பு. தேர்தலில் நிறுத்தப்படும் திறமை வாய்ந்தவரை தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை . அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே இருக்காதீர்கள். மாவட்டங்களுக்கு செல்லுங்கள் என அறிவுரையும் வழங்கியுள்ளார்.