அண்ணா பிறந்த தினம்(செப்15), திமுக தோற்றுவிக்கப்பட்ட தினம் மற்றும் பெரியார் பிறந்ததினம்(செப்17)ஆகிய மூன்று தினங்களையுயம் ஒருங்கிணைத்து திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நகரங்களில் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முப்பெரும்விழா வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூரில் நடத்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார்.
இந்த விழாவில் திமுக முன்னோடிகளுக்கு விருதுகள், பொற்கிழிகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
கரூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி முப்பெரும் விழா ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார். விழாவுக்கு பிரமாண்டமான இடத்தை தேர்வு செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து அங்கு பந்தல், மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்வது குறித்தும் செந்தில் பாலாஜி இப்போதே பணிகளில் இறங்கி விட்டார்.