Skip to content

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. துரைமுருகன் உற்சாகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் பணிகள் குறித்து விவாதிக்க திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர்டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, பொன்முடி, ஆ. ராசா, ஐ. பெரியசாமி, திருச்சி சிவா , அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் உள்ளிட்டோர்,அமைப்புச் செயலாளர் அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில், தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆலோசனைகளை வழங்கினார். அரசு செயல்படுத்திய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் தேர்தல் பிரச்சார யுக்திகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், இன்றைய கூட்டத்தில் உற்சாகமாகப் பங்கேற்றார். கூட்டத்திற்கு வருகை தந்தபோது செய்தியாளர்களைப் பார்த்துக் கையசைத்த அவர், “வந்துட்டேன்யா… வந்துட்டேன்யா!” உற்சாகமாக கூறிச் சென்றது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கூட்டம் முடிந்து கிளம்பிய துரைமுருகனிடம், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

error: Content is protected !!