சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சின்னம்மை பரவத் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில், சின்னம்மை நோயானது அதனால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் துளிகள் மூலமும், கொப்புளங்களில் இருந்து வரும் திரவத்தைத் தொடுவதன் மூலம் பரவும் என்றும், இது கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டியது என்ன?
எனவே, தன் சுத்தமும், கைகளைக் கழுவுதலும் அவசியம் என்றும், இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. நீர்ச்சத்துமிக்க ஆகாரங்கள், சத்தான உணவுகளை உண்ணுதல், பாதிக்கப்பட்டவரை அனைத்துக் கொப்புளங்களும் காய்ந்து உதிரும் வரை தனிமைப்படுத்தி வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக குணமடைந்த பின்னரே பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை கிருமிநாசினி கொண்டும், வெந்நீரிலும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

