ம.தி.மு.க. சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டம் அக்கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, “ஏற்கெனவே வலுவாக இருந்த தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தே.மு.தி.க. வருகையால் இன்னும் வலிமை பெறும். எதிர்தரப்பு கலகலத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல் உள்ளது.
நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர்பேசுவது, ராமநாதபுரத்தில் 2 பேர் சண்டைபோட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார். அதனை அக்கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் தி.மு.க. பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு காங்.,எம்.பி. மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X – தளத்தில் கூறியதாவது..
கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன
ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

