தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
“தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. மேலும் அத்தேர்வுகளில் குழந்தைகள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் ஆக்கவும் வழிமுறை உள்ளது. இது, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும்.
நாங்கள் திமுகவை சார்ந்தவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் பேசவில்லை பாஜக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவும் தான் பேசுகிறோம்.
கல்வி உரிமை சட்டத்தின் படி மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி கிடையாது என விதி உள்ள பொழுது இது போன்று மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனை தோல்வி அடைய செய்தால் அவர்கள் இந்த கல்வி திட்டத்திலிருந்தே வெளியேறி விடுவார்கள். இது பள்ளி இடைநிற்றலை தான் அதிகரிக்கும்.
இதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து இதனை எதிர்த்து வருகிறார்.
இந்த சூழலில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பணியை ஒன்றிய அரசு செய்து வருகிறார்கள்.
மாணவர்களின் எதிர்காலத்தில் தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக விளையாடும் போது அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டும். இந்த நடைமுறையை எதிர்த்து பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் நலனிலும் முதலமைச்சர் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். சிபிஎஸ்சி பயிலும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு வந்தவுடன் முதலமைச்சர் பதட்டம் அடைந்து இது குறித்து என்னிடம் பேசினார். நாளைய எதிர்காலம் இன்றைய மாணவர்கள் தான் என்பதில் முதலமைச்சர் உறுதியாக நம்புகிறார்.
சிபிஎஸ்சி யில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என கையெழுத்து போட சொன்னால் எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.
என்.சி.இ.ஆர்.டி மூலமாக வரலாற்றை மறைத்து வரலாற்றை திரித்து இருக்கிறார்கள். நாம் தேசவிரோதி என படித்தவர்களை அவர்கள் தியாகி என மாற்றுகிறார்கள்.
என்.சி.ஆர்.இ.டி உள்ளே நுழைந்தால் எஸ் சி ஆர் இ டி காணாமல் போய்விடும்.
தரமான கல்வி கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறார். செயற்கை நுண்ணறிவு கல்வியை ஆறாம் வகுப்பு முதல் கற்றுத் தர வேண்டும் என முடிவெடுத்து அடுத்த கல்வி ஆண்டு முதல் அது அமல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு குடிமகனையும் அறிவு சார்ந்து சிந்திக்க வைக்க வேண்டும்.
கல்வி உரிமை சட்டம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலின் படி கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கு எதிராகவே தற்பொழுது ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம் தான் அறியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில் நாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு செயல்படக் கூடாது