நாகையில் நாளை (செப் 20) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்திற்கு காவல்துறையால் புத்தூர் ரவுண்டானா அருகே பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் மொத்தம் 7 இடங்களுக்கு அனுமதி கோரப்பட்டபோதும், இந்த ஒரு இடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய் செல்லும் வழியில் உயர் மின்னழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்தி வைக்க தவெக மாவட்டச் செயலாளர் மின்சார வாரியத்தில் மனு அளித்துள்ளார். தற்பொழுது, விஜய்யின் சுற்றுப் பயணத்தின்போது அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், மரங்கள், மின்கம்பங்கள் மீது தொண்டர்கள் ஏறக்கூடாது என்று த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடரவேண்டாம். கர்ப்பிணிகள், முதியோர், சிறார்கள், நேரில் கலந்து கொள்வதை தவிர்த்திடுக. பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும், வரவேற்பு நடவடிக்கைகள் வேண்டாம். போக்குவரத்துக்கு தொல்லை கொடுக்காதீர், பிறர் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளகூடாது.
சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க உதவ வேண்டும், பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கக் கூடாது, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது. காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 12 நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் நிதானமாக கலைந்து செல்க.