கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் தாந்தோன்றிமலை கோவில் மற்றும் ஏமூர் கிராமத்தில் சிவனடியார்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பூஜை காரியங்கள் மற்றும் சேவை இனங்களுக்கு வழங்கப்பட்ட மானிய நிலங்களை, திருக்கோயில் தரப்புக்கு எந்த விதமான வாய்ப்பும் வழங்காமலும், தன்னிச்சையாகவும், சட்ட விரோதமாக தனி நபர்களின் பெயர்களை மாற்றி உத்தரவிட்டிருந்தார்கள். இது குறித்து கடந்த 2012 ஆம் ஆண்டு தெளிவாக நாம் வலிறுத்தி இருந்தோம் .
தற்போது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிலங்களை மீண்டும் திருக்கோயிலின் பெயரில் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. எந்த விதமான தடை ஏற்பட்டாலும், அதனை தகர்த்து இந்நிலங்கள் அனைத்தும் திருக்கோயில் வசம் கூடிய விரைவில் வந்துவிடும்.
தாந்தோன்றிமலை மற்றும் ஏமூர் ஆகிய பகுதிகளில் இவ்வாறான நிலங்கள் சுமார் 600 ஏக்கர் உள்ளன. எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எவரும் கடந்த 120 ஆண்டுகளுக்குரிய பதிவுத்துறை வில்லங்கங்கள், வருவாய் மற்றும் நில அளவை துறையின் ஆவணங்களை ஆராயாமல் நிலம் வாங்க வேண்டாம்.
கோவில் நிலத்தை நம்பி ஏமாந்த அப்பாவி பொதுமக்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் பொழுது பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் உரிமை இயல் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு கோருவதற்கு பொதுமக்களுக்கு உரிமை உள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து, அரசு தரப்பிலும் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்.
திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை நிலவரித் திட்ட வட்டாட்சியர்களால், சட்ட விரோதமாக பட்டா வழங்கப்பட்ட இடங்கள் குறித்து மாநிலம் முழுவதும் பொது அறிவிப்பினை வெளியிட வேண்டும். அப்போதுதான் அப்பாவி பொதுமக்கள் ஏமாறாமல் இருப்பார்கள்.
அரசு இவ்வாறு பிழைகளை தவறுகளை குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலமாக அறியலாம். இத்தகைய சூழலில் அப்பாவி பொதுமக்களுக்கு எந்த விதத்தில் நிவாரணத்தை தர இயலும் என்பதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

