Skip to content

போர் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்.. வைரமுத்து

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மோதல் நீடித்துக்கொண்டே சென்றால் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்புகளும் கணக்கிட முடியாத அளவு இருக்கும் என அஞ்சப்படும் நிலையில், போரால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் அதனை நிறுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.


வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- போர் என்பது
மனித குலத்தின்
சமநிலையைச் சாய்த்துவிடும்

மனிதர்களின்
தோள் வலிமையைத் தாண்டித்
தொழில் நுட்பப்
பிசாசுகளின் கைகளுக்கு
இடம்பெயர்ந்துவிட்டது போர்

அணு ஆயுத அழிவுகள்
அனுமானிக்க முடியாதபடி
இருக்கும்

பைத்தியக்காரன் இழுக்கும்
நேர்கோடு
எப்போதும் நேராக வாராது;
போரும் அப்படித்தான்

நமது சாப்பாடும் தூக்கமும்
ஏதோ ஒரு நாட்டின்
நகர்வோடு
முடிச்சுப் போடப்பட்டுவிட்டது

ஈரானின் “ஹோர் முஸ்”
நீரிணை மூடப்பட்டுவிட்டால்
தெற்காசியாவின்
ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும்

ஒவ்வொரு வீட்டு உண்டியலும்
களவாடப் படும்

மூளும் போர்
நீளும் போராக இல்லாமல்
நிறுத்தப்பட வேண்டும்

ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில்
நாற்காலிகளில் ஏறிநின்று
பேசவேண்டும்

‘போர் ஒழிக’

இல்லையேல்
ஒவ்வொரு நாட்டுச் சூரியனும்
மூடப்படும்

தொலைக்காட்சிகளின்
போர்க் காட்சிகளை
வாண வேடிக்கையென்று
காணவேண்டாம் யாரும்

அதுவே
சொந்த வீதியில் நடந்தால்
என்னவாகும் என்று
எண்ணிப் பாருங்கள்

எல்லா மனிதரும்
போருக்கு எதிரான
பதாகையாக வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!