நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதாவது:- இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் சேமிப்பு திருவிழா. தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது . வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.
ஜிஎஸ்டியில் 6 சதவீதம், 18 சதவீதம் வரி வரம்புகள் மட்டுமே பெரும்பாலான பொருள்கள் மீது விதிக்கப்படும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99 சதவீதம் பொருட்களின் வரி 5 சதவீதத்தின் கீழ் வந்துள்ளது. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும். ஏழைகள், நடுத்தர வர்த்தகத்தினர், மகளிர், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் பொருள் கிடைக்கும். ஜிஎஸ்டி சீர் திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. 2-ம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும். பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.
உள்நாட்டு தயாரிப்புக்கு முனைப்பு காட்டுங்கள். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சுய சார்பு இந்திய என்ற இலக்கை எட்ட முடியும். சர்வதேச அளவில் சிறந்த தரத்தோடு இந்திய நிறுவனங்கள் பொருள்களை தயாரிக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்கள் சிறந்த தரத்தோடு அமைய வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். சிறு, குறு தொழில்கள் மக்களுக்கு தேவையான பொருள்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பு பலனை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகளும் ஆர்வமாக உள்ளனர். வருமான வரிச்சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தாண்டு ரூ.2.5 லட்சம் கோடி வரை செலவு குறையும்.ஏழைகள், புதிய நடுத்தர வர்கத்தினராக உயர இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு உதவும். ஜிஎஸ்டி வரி குறைப்பால், நடுத்தர வர்க்கத்தினர் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.