Skip to content

வரதட்சணை கொடுமை…இளம்பெண் தற்கொலை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் சந்தேகப் புத்தியால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தைச் சேர்ந்த இந்திரா (24) என்பவருக்கும், எச்.மைலள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சணையாக 60 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருமணமான சில ஆண்டுகளில் தம்பதிக்குக் குழந்தை இல்லாததாலும், சாமியின் தாய் மற்றும் சகோதரி கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாலும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பேக்கரி தொழில் செய்து வந்த சாமிக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டதால், மீண்டும் தொழில் தொடங்கப் பணம் கேட்டு இந்திராவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அத்துடன் இந்திராவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இந்திரா, நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஹாசன் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தனது மகளின் மரணத்திற்கு சாமியும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என இந்திராவின் பெற்றோர் துட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதே தற்கொலைக்கு முக்கியக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!