Skip to content

காதர்மொகிதீனுக்கு தகைசால் விருது, முதல்வருக்கு டாக்டர் அலிம் பாராட்டு

தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருது தமிழக அரசால் ஆண்டுதோறும்  வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது   மூத்த அரசியல் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் திருச்சி  பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில்,  அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்’

காதர் மொகிதீனுக்கு  தகைசால் தமிழர் விருது வழங்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி கி.ஆ.பெ. வி. அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வர் மற்றும் மூளை நரம்பியல் துறை வல்லுநர் டாக்டர் அலீம்,  நன்றி  தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு  தகைசால் தமிழர் விருது வழங்கியதற்காக  முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு  நன்றி, பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். காதர் மொகிதீன் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  படித்தவர். நானும் அந்த கல்லூரி முன்னாள் மாணவர் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.  காதர் மொகிதீன், பொதுவாழ்க்கையில்,  அனைவரிடமும் அன்பு காட்டுவதுடன், சமய நல்லிணக்கம், இறையாண்மையை பேணி பாதுகாத்து வருபவர்.

எனவே இந்த விருதுக்கு  அவர் தகுதியானவர். அவரை தேர்வு செய்ததற்காக   தமிழக அரசுக்கும், தேர்வு குழுவுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும்,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

 

error: Content is protected !!