Skip to content

விமான டிக்கெட் ரத்து கட்டணத்தில் அதிரடி மாற்றம்: பயணிகளுக்குச் சாதகமான புதிய விதிகள் வெளியீடு

விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, உள்நாட்டு விமானப் பயணங்களுக்குத் திட்டமிட்ட தேதிக்குக் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பும், சர்வதேசப் பயணங்களுக்குக் குறைந்தது 15 நாட்களுக்கு முன்பும் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், புக்கிங் செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும்.

டிக்கெட்டில் உள்ள தேதியை மாற்றும் போது ரத்துக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றாலும், புதிய டிக்கெட்டின் விலை கூடுதலாக இருந்தால் அந்த விலை வித்தியாசத்தை மட்டும் பயணிகள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், டிக்கெட்டில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பித்தால் அதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. ஒருவேளை ரீபண்ட் வசதி இல்லாத டிக்கெட்டாக இருந்தாலும், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட விமான நிலைய வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் கட்டாயம் திரும்ப வழங்க வேண்டும் என்று DGCA அறிவுறுத்தியுள்ளது.

பணம் திரும்பக் கிடைக்கும் கால அவகாசத்தைப் பொறுத்தவரை, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு 7 நாட்களுக்குள்ளும், டிராவல் ஏஜென்ட்கள் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு 14 நாட்களுக்குள்ளும் ரீபண்ட் வழங்கப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் விமான பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளது.

error: Content is protected !!