தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஜே.சி.பி வாகனத்துடன் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் லாரி முற்றிலும் நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

